“தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசால் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தர முடியாது என்று குலாம் நபி ஆசாத் கூறியிருப்பது பற்றி…’ என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில…

விட்டுக் கொடுக்க மனம் வராது

காஷ்மீர் மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைந்தாலும் மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைக்காது. மத்தியில் ஆட்சிக்கு வரும் வரை எதிர்கட்சியினர் கூறிக் கொண்டே இருப்பார்கள். ஏனெனில் காஷ்மீரில் இருக்கும் ஒருசிலர் பல ஆண்டுகளாக அனுபவித்த சலுகைகளை விட்டுக் கொடுக்க மனம் வராது. தற்போதுதான் காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. மிகுந்த அரசியல் அனுபவம் மிக்கவரான குலாம் நபி ஆசாத் கூறியிருப்பது முற்றிலும் சரியே.

தி.ரெ.ராசேந்திரன், திருநாகேச்சரம்.

ஒன்றுபட்ட பாரதம்

பல வருடங்களாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு, அதனால் எந்தவித பயனும் இல்லாமலிருந்தது. வன்முறை தீவிரவாதம் மேலோங்கியது. ஒட்டுமொத்த பாரத வளர்ச்சிக்கு இம்மாநிலத்திற்கு மட்டும் தனி அந்தஸ்து இருப்பது இடையூறு என்பதால் சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு ரத்து செய்தது. தற்பொழுது வெற்றிகரமாகத் தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தலுக்குப் பிறகு புதிய அரசால் இம்மாநிலத்திற்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெற முயற்சிப்பது தேவையற்றது.

கே.எ.நாராயணன், மருங்கூர்.

மீட்டுத் தருவது கடினம்

பாஜகவின் நீண்ட நாள் கனவே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என்பதே. அதைத் துணிச்சலுடன் சென்ற பாஜக அரசு நிறைவேற்றியது. மத்தியில் மீண்டும் பாஜக அரசே அமைந்திருப்பதால் மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சிறப்பு அந்தஸ்தை இனி மீட்டுத் தருவது கடினம் என்பது நிதர்சனமான உண்மை. எப்படி திராவிட கட்சிகள் நீட் தேர்வை ஒழிப்போம் என்பதை தேர்தல் வாக்குறுதியாக வைக்கின்றனவோ அதே போல தேர்தல் அறிவிப்பாக மட்டுமே இனி ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தும் ஆகும்.

உதயம் ராம், சென்னை.

சிக்கல்

காஷ்மீரில் பயங்கரவாத பிரச்னை துவங்குவதற்கும் இவ்வளவு சிக்கலாக வளர்ந்திருப்பதற்கும் எளிதில் தீர்க்க முடியாத அளவுக்கு முள் மேல் சேலையாக விளங்குவதற்கும் முக்கிய காரணமே காங்கிரஸ் கட்சிதான் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் அறிவார்கள். இப்போது மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தர முனைந்தால் அது எந்த மாதிரியான சிக்கல்களில் கொண்டுவிடும் என்பது இன்றைய அரசியல் தலைவர்களுக்குத் தெரியும்.

கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.

எளிதான செயல் அல்ல

370 சட்டப் பிரிவு ரத்து என்பது பாஜகவின் அதிமுக்கிய நீண்ட கால கோரிக்கை மற்றும் திட்டம். மத்தியில் பாஜக அரசு இன்னும் நான்காண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் தொடரப் போகும் நிலையில் சிறப்பு அந்தஸ்தை வழங்க வாய்ப்பில்லை. சிறப்பு அந்தஸ்து என்பது அந்த மாநில வளர்ச்சிக்காகத்தான். மாநிலம் வளர்ச்சி அடையாமல் தீவிரவாதம்தான் வளர்ந்திருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வரிப் பணத்தில் 75 ஆண்டு காலம் சலுகைகள் வழங்கியும் அங்கு வளர்ச்சி இல்லை. .

தி.சேகர், பீர்க்கன்கரணை.

சிறப்பு அந்தஸ்து இரண்டாம்பட்சம்

மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்பொழுது மாநிலத்தில் ஏற்படக் கூடிய மாற்றுக் கட்சி அரசால் சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப் பெறுவது இயலாத காரியம். ஜம்மு-காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்படுகிற அரசால் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப முடியுமே தவிர, வேறொன்றும் செய்ய இயலாது. இன்றைய சூழலில் காஷ்மீர் மக்களுக்கு வேண்டியது அமைதியே ஒழிய, சிறப்பு அந்தஸ்து என்பது இரண்டாம்பட்சம்தான். அதைப் புரிந்துகொண்டு பதவியேற்கப் போகும் அரசு செயல்பட வேண்டும்.

ப.சுவாமிநாதன், அம்பத்தூர்.

வெறும் அரசியல் பேச்சு

சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டு வருவோம் என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் முயற்சியே. மத்தியில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியமைத்தால் இது சாத்தியமாகலாம். அது வரை இது வெறும் அரசியல் பேச்சு மட்டுமே. எது எப்படியாயினும், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் எனும்போது அதனை அப்படியே தொடர்வதுதான் அரசியல் நாகரிகம் ஆகும்.

ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

வேடிக்கையான வாக்குறுதி

காங்கிரஸ் கட்சி அல்லது ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தர விரும்பும் எந்த கட்சியும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் தேர்தல் வாக்குறுதி அளிப்பது எதன் அடிப்படையில் என்பது தெரியவில்லை. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்க்கத் துணிவில்லாத அரசியல் கட்சிகள் வாய் சவடால் விடுவது வேடிக்கை. தேர்தல் நடைபெறுவது, வாக்களிப்பது என்று மக்கள் மனதில் ஜனநாயக பாதை மலர்வதைப் பார்க்கும்போது அரசியல் கட்சிகள் சுயநலத்திற்காக வீண் வாக்குறுதிகள் தருவதாகத் தோன்றுகிறது.

ஜீவன்.பி.கே., கும்பகோணம்.

பாதகங்களே அதிகம்

சிறப்பு அந்தஸ்துடன் ஜம்மு-காஷ்மீர் இருந்த காலங்களில் சாதகங்களை விட பாதகங்களையே மக்கள் அதிகம் அனுபவித்தனர். மத ரீதியாக தீவிரவாதம் ஊக்குவிக்கப்பட்டு, பாகிஸ்தானும் துணிச்சலாக ஆதிக்கம் செலுத்தியதை மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். எனவே சிறப்பு அந்தஸ்துக்கு மக்களின் பெருவாரியான ஆதரவு கிடைப்பது கஷ்டமே. அவர்கள் இந்தியாவின் பாதுகாப்பையே விரும்புவார்கள் என்பதை இனிவரும் தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.

ஜ.அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

ஜனநாயகத்தின் வெற்றி

அரசியல் சாசன பிரிவு 370 நீக்கப்பட்ட பின் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் சமீபத்தில் மிகவும் அமைதியாக நடந்தேறி உள்ளது. இது இந்திய ஜனநாயகத்தின் வெற்றி என்பதில் ஐயமில்லை. ஜம்மு-காஷ்மீர் பகுதி இந்திய தேசத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்பதே நமது நிலைப்பாடு. பிரிவினைவாதம் ஒடுக்கப்பட வேண்டும். பிரிவினைவாதிகளுக்கு அஞ்சி நாட்டைக் கூறு போடுவதும் தடுக்கப்பட வேண்டும்.

வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்.

மிகச் சரியானது

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியைப் பிடித்தாலும், சிறப்பு அந்தஸ்து குறித்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினாலும் சிறப்பு அந்தஸ்தை திரும்ப வழங்குவது என்பது பாஜக ஆளும் மத்திய அரசு கையில் உள்ளது. அவ்வாறு இருக்க சிறப்பு அந்தஸ்து கோரிக்கை வைக்கும்போது மத்திய அரசு நிச்சயமாக நிராகரிக்கத்தான் செய்யும்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.

கோருவது சரியல்ல

மதத்தின் பேரைச் சொல்லி ஜம்மு-காஷ்மீரை தங்கள் வசம் இழுக்க அண்டை நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஜம்மு-காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு அமைந்த பின் சிறப்பு அந்தஸ்து வேண்டுமெனக் கோருவது சரியல்ல. தேர்தல் மூலம் தங்களுக்கான அரசு அமைய இருக்கும் வேளையில் சிறிது காலத்திற்கு வேண்டுமென்றால் பொருளாதார உதவிகள் செய்வதில் தவறில்லை.

எஸ்.சிறீகுமார், கல்பாக்கம்.

மக்களிடையே எடுபடாது

சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவை நீக்கியதை அந்தப் பகுதி மக்களே வரவேற்றிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளின் வெற்றுத் தேர்தல் வாக்குறுதி மக்களிடையே எடுபடாது என்பதே நிதர்சனம். சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொணர்வது நடைமுறையில் மேலும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஜம்மு-காஷ்மீர் மக்கள் இதனை நன்கறிவர். யதார்த்த உண்மையை வெளிப்படையாகக் கூறிய குலாம் நபி ஆசாதின் நேர்மை பாராட்டுக்குரியது !

கே.ராமநாதன், மதுரை.

வெற்று வாக்குறுதிகள்

ஏற்கெனவே வெற்று வாக்குறுதிகளை நம்பி மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டு ஐந்தாணடுகள் முடிந்த பின்னும் மீண்டும் பெற்றுத் தருவோம் என்று மக்களை ஏமாற்றுவது சரியல்ல. சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவோம் என்று உறுதி அளிப்பதைவிட, தவறான பழக்கத்துக்கு அடிமையாகும் இளைஞர்களை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

என்.வி.சீனிவாசன், புது பெருங்களத்தூர்.

ஆசாத் கூறுவது சரியே…

காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துள்ளது. சுற்றுலா வளர்ந்துள்ளது. 1954-இல் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பெற்று,1957-இல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகி, 2019-இல் சிறப்பு அந்தஸ்து நீக்கப் பெற்று, மற்ற மாநிலங்கள்போல் ஆகியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில்ó எதிர் மனுக்கள் யாவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை பாஜக முதலிய எட்டு கட்சிகள் ஆதரித்த நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெற்றுத்தர முடியாது என்று குலாம் நபி ஆசாத் கூறுவது சரியே.

நா.ஜெயராமன், பரமக்குடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *