முரசொலி செல்வம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம்(84) மறைவுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“அந்தோ… கழகத்தின் கொள்கைச் செல்வம் மறைந்தாரே!”

“தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்!”

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது.

தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்துகொண்டு இளமைப் பருவம் முதலே திறம்படச் செயலாற்றியவர் அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞரும் அவரது மனசாட்சியான முரசொலி மாறனும் மனதில் நினைப்பதை எழுத்தில் – செயலில் நிறைவேற்றியவர் பாசத்திற்குரிய முரசொலி செல்வம்.

கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர்.

அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டப்பேரவையில் கூண்டிலேறி கருத்துரைத்தவர். “முரசொலி சில நினைவுகள்” என்ற அவரது புத்தகத் தொகுப்பு முரசொலி எதிர்கொண்ட நெருக்கடிகளையும் முரசொலியோடு செல்வத்துக்கு இருக்கும் பின்னிப் பிணைந்த உறவையும் எடுத்துரைப்பது ஆகும். தேர்தல் களம் முதல் திரைப்படப் பணிகள் வரை அனைத்துத் துறைகளிலும் முத்திரையைப் பதித்தவர். எந்த நிலையிலும் கழகமே மூச்சு என வாழ்ந்த கொள்கைச் செல்வம் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *