சென்னை மக்களை இன்னொரு பேரிடருக்கு தள்ளாமல் தடுக்க நடவடிக்கை வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

வடகிழக்குப் பருவமழை வரும் 15 ஆம் தேதி தொடங்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள்ளாக போர்க்கால அடிப்படையில் வெள்ளத்தடுப்புப் பணிகளை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் நிறைவு செய்ய வேண்டும். இன்னொரு பேரிடரில் இருந்து மக்களைக் காக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சென்னை மாநகரத்தின் எந்தப் பகுதியிலும் வெள்ளத்தடுப்புப் பணிகள் நிறைவடைந்ததாகத் தெரியவில்லை. நடப்பு ஆண்டில் இயல்பை விட அதிகமாக வடகிழக்குப் பருவமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அது குறித்த எந்த அக்கறையுமின்றி, மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணி உள்ளிட்ட வெள்ளத்தடுப்பு பணிகளை அரசு மிகவும் அலட்சியமாக மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.

சென்னை மாநகரம் கடந்த பத்தாண்டுகளாகவே ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழையின் போது பேரிடர்களை எதிர்கொள்வது வாடிக்கையாகி விட்டது. 2021 இல் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மழை வெள்ள பாதிப்புகள் அதிகரித்து விட்டது. வெள்ளத்தடுப்புப் பணிகள் சரிவர மேற்கொள்ளப் படாதது தான் இதற்குக் காரணம் ஆகும். 2021 ஆம் ஆண்டில் மிக மோசமான வெள்ளத்தையும், உயிரிழப்பு மற்றும் உடமையிழப்புகளையும் சென்னை மாநகரம் எதிர்கொண்டது. அதைத் தொடர்ந்து சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றிய

ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுனர் குழுவை அரசு அமைத்தது. அந்தக் குழு அதன் இடைக்கால அறிக்கையை 2022-ஆம் ஆண்டு மே மாதத்திலும், இறுதி அறிக்கையை 2023-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதியும் தமிழக அரசிடம் தாக்கல் செய்தது.

திருப்புகழ் குழு பரிந்துரைப்படி வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், கடந்த ஆண்டு சென்னையில் எந்த இடத்திலும் வெள்ள நீர் தேங்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும் கூறினார்கள். ஆனால், கடந்த ஆண்டு திசம்பர் மாதத் தொடக்கத்தில் செய்த மழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது; நூற்றுக்கணக்கான மகிழுந்துகள் அடித்துச் செல்லப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்கள் கோபத்தின் உச்சிக்கு சென்ற நிலையில், குடும்பத்துக்கு ரூ.6000 இழப்பீடு வழங்கி அவர்களின் கோபத்தைத் தணிக்க தமிழக அரசு முயன்றது. இந்த ஆண்டும் அத்தகைய நிலை ஏற்படாமல் சென்னை மாநகர மக்கள் பேரிடரை எதிர்கொள்ளாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.

சென்னையில் வெள்ளத்தடுப்புப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டிருப்பதால், இந்த ஆண்டில் 20 செ.மீ மழை பெய்தாலும் நகருக்குள் மழை நீர் தேங்காது என்று கடந்த ஆண்டு பேசிய வசனத்தையே இந்த ஆண்டும் அமைச்சர் பெருமக்கள் பேசி வருகின்றனர். ஆனால் சென்னையில் கடந்த செப்டம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் 7.42 செ.மீ மழை பெய்ததற்கே பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போலத் தேங்கி நின்றது. அதன்பின் இரு வாரங்களாகியும் வெள்ளத்தடுப்புப் பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் வடகிழக்கு பருவமழையை நினைத்து சென்னை மக்கள் அஞ்சுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *